புனர்வாழ்வுப் பணியகத்தின் தடுப்பு மற்றும் புனர்வாழ்வுக்கான விசேட சிந்தனைக் குழு (Think Tank) நிறுவுதல்
புனர்வாழ்வுப் பணியகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளை, நவீன உலகிற்கு ஏற்ற வகையில் மிகவும் முறையான மற்றும் அறிவியல் ரீதியான அணுகுமுறையின் கீழ் மேற்கொள்வதற்காக, துறைசார் நிபுணர்களைக் கொண்ட “தடுப்பு மற்றும் புனர்வாழ்வுக்கான சிந்தனைக் குழு” (Think Tank For Prevention & Rehabilitation) 2026 மே 12 அன்று புனர்வாழ்வுப் பணியகத்தின் கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
பணியகத்தின் பேரவை தலைவர் முதுநிலை பேராசிரியர் வசந்தா சுபசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கன்னி அமர்வில், புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் எம்.எஸ். அமித் மற்றும் ஆணையாளர் (புனர்வாழ்வு) பிரிகேடியர் பிரசன்ன பிரியலால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் ருவன் லியனகே, மனநல விசேட வைத்தியர் ரூமி ரூபன், துறைத் தலைவர் வைத்தியர் ஹரினி டி சொய்சா மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் சுரங்க லக்மால் வேவெல்வல ஆகியோரும், களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான ஓஷதி விந்தியா ஹேரத் மற்றும் ஆர்.எம்.ஜி.கே. கருணாரத்ன ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களுடன் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் சிரேஷ் உளநல உளவளத்துணையாளர் காமிணி ரத்நாயக்க, உளச்சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமிந்த வீரசிறிவர்தன, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் உதவி உளவளத்துணையாளர் தனுஷ்க சம்பத் விஜேசிங்க மற்றும் புனர்வாழ்வுப் பணியகத்தின் உளவளத்துணையாளர் சரத் அமரபந்து ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இங்கு வருகை தந்திருந்த நிபுணர்கள், இக்குழுவின் எதிர்கால செயற்பாடுகள் குறித்துத் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், சர்வதேச தரத்திற்கு இணங்க மிகவும் துல்லியமான மற்றும் அறிவியல் பூர்வமான புனர்வாழ்வுச் செயல்முறையொன்றின் அவசியம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினர்.