தற்போதைய அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு நேரடியாகப் பங்களிப்பு வழங்கும் புனர்வாழ்வு பணியகத்தின் புனர்வாழ்வு செயன்முறை மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்காக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நேரடித் தலையீட்டைப் பெற்றுக்கொள்வதற்கும், அவற்றை ஒரு வலையமைப்பின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடனும் ஆரம்பிக்கப்பட்ட உளவளத்துணையாளர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது செயலமர்வு, “விஷப் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்திற்கு” இணையாக பொலன்னறுவை மாவட்டத்தை இலக்காகக் கொண்டு 05.03.2026 அன்று பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இச்செயலமர்வு பொலன்னறுவை மாவட்ட செயலாளர் திரு. E.M.D.S. ஏக்கநாயக்க, புனர்வாழ்வு பணியகத்தின் தலைவர் முதுநிலை பேராசிரியர் வசந்தா சுபசிங்க, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் M.S. அமித், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு. அசோக தர்மசேன, பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. புத்திக மனதுங்க, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை பேராசிரியர் மற்றும் மனநல விசேட வைத்திய நிபுணர் அமில இசுரு, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தி திரு. தனுஷ்க சம்பத் விஜேசிங்க, பொலன்னறுவை சிறைச்சாலையின் பிரதான சிறைகாவலர் திரு. பிரியந்த புஷ்பகுமார உள்ளிட்ட பொலன்னறுவை மாவட்ட அரச அதிகாரிகள், அழைப்பாளர்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான உளவளத்துணையாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
போதைப்பொருள் அற்ற சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்காகத் தேவையான அறிவைப் பகிர்ந்துகொள்ளுதல், ஒருங்கிணைப்பு வலையமைப்பொன்றை உருவாக்குதல் மற்றும் புனர்வாழ்வு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்களை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் ஒரு விசேட கலந்துரையாடல் ரீதியிலான அறிவார்ந்த உரையாடலும் இங்கு இடம்பெற்றது.